பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்.மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினருடன் கைகோர்த்து உள்ளுராட்சிமன்றங்களை ஸ்தாபிக்க போவதில்லை. சுயேட்சைக் குழுக்கள் ஆளும் தரப்புடன் கைகோர்க்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றிப்பெற்று அதிகளவான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது வழங்கிய ஒத்துழைப்பை இந்த தேர்தலிலும் வழங்கியதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தேசிய மட்டத்தில் அதிகாரத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவதை போன்று பிரதேச மட்டத்திலான அரச நிர்வாகத்தையும் சிறந்த முறையில் செயற்படுத்துவோம்.
ஊழலற்ற அரசாங்கத்தை ஸ்தாபித்ததை போன்று ஊழலற்ற உள்ளுராட்சிமன்ற அதிகாரங்களையும் எம்மால் ஸ்தாபிக்க முடியும். ஒருசில பகுதிகளில் பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெறாமைக்கான காரணத்தை ஆராய்ந்து குறைகளை நிவர்த்தி செய்து முன்னோக்கிச் செல்வோம்.
பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்.மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினருடன் கைகோர்த்து உள்ளுராட்சிமன்றங்களை ஸ்தாபிக்க போவதில்லை. தோல்வியடைந்துள்ள தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைத்து உள்ளுராட்சிமன்றங்களை ஸ்தாபிப்பது சிக்கலானதே.
ஒருசில சுயேட்சைக்கு குழுக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவதற்கு தயாராக இருக்குமாயின் அந்த தரப்பினரை ஒன்றிணைத்து பெரும்பான்மை பலமற்ற உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைக்கலாம். எவ்வாறாயினும் மாற்றுக் கொள்கை கொண்டுள்ள எதிர்தரப்பினருடன் ஒன்றிணை போவதில்லை என்றார்.