மாவனல்லை அருகே போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு பொலிஸில் பிடித்துக் கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாவனல்லை அருகே உள்ள ஹெம்மாதகம கிராமத்தில் இந்தச் சம்பவம் நேற்று (13) நடைபெற்றுள்ளது.
குறித்த கிராமத்தில் சுமார் 27 வருடங்களாக நபரொருவர் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, இளைஞனொருவனை குறித்த போதைப் பொருள் வர்த்தகரிடம் போதைமருந்து வாங்குவதுபோல அனுப்பி, அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அதனையடுத்து சந்தேக நபரை பொறுப்பேற்க ஹெம்மாதகமை பொலிஸார் மட்டுமன்றி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் அவ்விடத்துக்கு வருகை தந்தபோதும் பொதுமக்கள் குறித்த நபரை பொலிஸில் ஒப்படைக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் போன்று ஹெம்மாதகமை பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள மாட்டார்கள் என்று ஊர்மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கேகாலை பொலிஸ் நிலையப் பொலிஸார் வருகை தந்து சந்தேக நபரைப் பொறுப்பெடுத்து சட்டநடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.