மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதி வாகனக் களஞ்சியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருட்டுப் போயிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மூன்று மாதங்களின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியில் இருந்து தாங்கள் மீட்டுள்ளனர் என மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீலு பிரதேசத்தில் கடந்த வருடம் மோட்டர் சைக்கிளில் சட்டவிரேதமாகக் கசிப்புக் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பல்சர் ரக மோட்டர் சைக்கிளுடன் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மோட்டர் சைக்கிளைப் பறிமுதல் செய்து, அதனை அரச உடமையாக்கியது. நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள களஞ்சியசாலை பகுதியில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 4 ஆம் திகதிக்கும் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மோட்டர்
சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாக 8 ஆம் திகதி நீதிமன்றப் பதிவாளர் மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட உதவி பொலிஸ் மா அதிப ரின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்புத் தலைமையக பொலிஸ் நிலையப் பிரதம பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜீ.எம்.பி.ஆர். பண்டாரவின் நெறிப்படுத்தலில் பெரும் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கஜநாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் புலனாய்வு பிரவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மேற்படி வாவியில்நேற்று இயந்திர படகு மூலம் மேற்கொண்ட தேடுதலின் போது மோட்டார்
சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.மீட்டகப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.