வெலிக்கடை சிறைச்சாலையை இடம் மாற்றி அதன் காணியை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் பெறுமதி ரூபா.32 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹொரணை பகுதிக்கு வெலிக்கடை சிறைச்சாலை இடம்மாற்றப்படவுள்ளது.சிறைச்சாலை அமைப்பதற்காக ஹொரணை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 200 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஹொரணையில் சிறைச்சாலை அமைக்க ரூபா 18 மில்லியன் செலவிடப்படவுள்ளதாகவும் ரூபா 100 கோடிக்கு மேற்படாமல் திட்ட அறிக்கையை பெற சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச கேள்வி கோரலுடன் நவீன வசதிகளுடன் சிறைச்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளோம்.அமைக்கப்படவுள்ள புதிய சிறை தற்போதைய சிறைச்சாலையை விட நான்கு மடங்கு பெரியது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, திறந்தவெளி சிறைச்சாலை முறையை மேம்படுத்துவதற்கும், சிவில் குற்றவாளிகளுக்கு புவிசார் குறியிடல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.
வியாழன் (10) அதிபர் ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.