தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் மக்கள் நலன் அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்பட்டுவருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
“ஒபட்ட கெயக்- ரட்டட ஹெட்டக்” செமட்ட நிவஹண தொணிப்பொருளில் மானிய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் (19) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
இலங்கையில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்ற தேசிய மக்கள் சக்தியின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மானிய விடமைப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (19) மாலை நடைபெற்றது.
தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கதுரை சுபாஷ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திலகநாதன், மகளிர் அணி தலைவி வனிதா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மானிய வீட்டு திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதுடன், முதல் கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாவும், மூன்றாம் கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாயும், நான்காம் கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாயும், 5 ஆம் கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபாயும் என ஐந்து கட்டங்களாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,
அரசாங்கத்தின் இந்த வீடமைப்பு மானியத்திற்கான வேலைத்திட்டத்தில் முதல் கட்ட நிவாரணம் வழங்குவதற்கான நாங்கள் இன்று பயனாளிகளுக்கான 60 லட்சம் ரூபாய் பரிந்து அளிக்கும் இந்த வேலை திட்டத்திற்கு இன்றைய தினம் வருகை தந்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் இந்த நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நிலையிலும் வாழ முடியாத பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் இந்த நாடு அசௌகராயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததை இந்த நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடன் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைமை காணப்பட்டது.
ஆனாலும் தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை ஆட்சி பீடம் ஏற்றதன் பின்னர் புதிதாக ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து மக்களுக்காக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களுக்கு அதற்கான முன்னேற்றகரமான விடயங்களை செய்து வருகின்றோம், நிவாரணங்களை வழங்கி வருகின்றோம், அதன் அடிப்படையில் இன்றும் உங்களது அடிப்படை தேவையான வீட்டு தேவைகளை நிறைவு செய்வதற்கான மானிய தொகையினை இன்று உங்களுக்காக வழங்க காத்திருக்கின்றோம்.

இந்த காலப்பகுதியில் புதிதாக வீடு ஒன்றை அமைப்பதற்காக பல இலட்சம் ரூபாய்களை மக்கள் செலவழிக்க வேண்டி ஏற்படும். ஆனால் வறுமை நிலையில் இருக்கும் நமது மக்களால் அவ்வாறான ஒரு தொகையை செலவழித்து ஒரு வீட்டை கட்டிக் கொள்ள முடியாத நிலைமை இருக்கின்றது. அதனால் இந்த அரசாங்கம் என்கின்ற ரீதியில் நாங்கள் உங்களுக்காக இந்த முதல் கட்ட வேலை திட்டங்களை வழங்க இருக்கின்றோம் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 பயனாளிகளுக்கு இந்த 10 லட்சம் ரூபாய் வீட்டு திட்டத்தை நாங்கள் முதல் கட்டமாக வழங்கி இருக்கின்றோம்.
இன்றைய தினம் வாழைச்சேனை பகுதியில் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி இருந்தோம். அதேபோன்று ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகர், காத்தான்குடி, மண்முனை வடக்கு, மண்முனை பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, போரதீவு பற்று ஆகிய இந்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பயனாளிகளான 40 நபர்களை தேர்வு செய்திருந்தோம். இன்றைய தினம் அதற்கான கொடுப்பனவை உங்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.

இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி உங்களது தேவையினை நீங்கள் நிறைவு செய்து கொள்ள வேண்டும். மிக சிறப்பாக உங்களது எதிர்காலத்திற்காக ஒரு வீடு ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களது பங்களிப்பையும் செலுத்தி சிறந்த ஒரு வீட்டை நிர்மாணித்து கொள்ளுங்கள் நிதிகளை வீணடிக்காமல் சரியான முறையில் அதனை பயன்படுத்தி நீங்களும் பயனை பெற்றுக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இன்னும் பல விடயங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்கின்ற ரீதியில் நாங்கள் செயல்படுத்துவோம் எதிர்வரும் காலங்களில் இன்னும் பல விடயங்களை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.என்றார்.







