கனடாவின் பிரம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத் தூபி தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் செவ்வாய்க்கிழமை 20 தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிடும்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமைச்சர் ஹேரத் தனது விளக்கத்தில், “இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதற்கு முன்னதாகவே எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், இறுதி யுத்தத்தின்போது நந்திக்கடல் பகுதியில் கைக்குழந்தைகளுடன் வந்தவர்களைக்கூட இலங்கை இராணுவத்தினர்தான் காப்பாற்றினர் என்றும், இன அழிப்பு என்பது தமிழர்களை இராணுவத்தினர் தேடித் தேடி கொலை செய்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் அவர் வாதிட்டார். யுத்த காலத்தில் சரணடைந்த அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களை இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வுகளைத் தமிழ் சமூகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒரு பகுதியினரும் “இன அழிப்பு” என வர்ணித்து வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினங்கள் போன்ற நிகழ்வுகளில், “இன அழிப்பு” உள்ளிட்ட பதங்களைப் பயன்படுத்தி கோஷங்களும் பதாதைகளும் வைக்கப்படுவது வழமையாகிவிட்டது.
தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளுக்கும், அனுபவித்த துயரங்களுக்கும் நீதி கோரி சர்வதேச அளவில் பல்வேறு நினைவுச் சின்னங்களை அமைத்தும், போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் “இன அழிப்பு” போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் ஏன் எடுக்கப்படுவதில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
NPP அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, தமிழ் மக்களின் நீண்டகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதால், இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
