யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.

பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.
இதன்போது பெண் வீட்டார், குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்ததாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பி.ப 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு, யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இற்றிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த யுவதியை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.