காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (23) மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.