வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு உதவி வழங்கும் திட்டத்தைப் பெறுவதற்கு தனிச் சிங்களத்தில் மட்டும் விண்ணப்பப் படிவங்களை அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்கள் வழங்குகின்றன. இதனால், தமிழ் பேசும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், அவர்களின் மொழி உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளரின் பெற்றோரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ரூ. 10 ஆயிரம் பெறுமதியான பொதி வழங்கப்படுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்களே தனிச் சிங்களத்தில் மட்டும் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.இவ்வாறு சிங்கள மொழியில் மட்டும் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ் பேசும் மக்கள் அலைந்து திரிகின்றனர்.
முன்னதாக, இந்தப் பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலமான விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன. பின்னர், தமிழ் மொழி மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் என கூறிக்கூறியே சில அலுவலகர்கள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தனிச்சிங்கள மொழி மூல விண்ணப்பப் படிவங்களை வழங்கி உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும் என வற்புறுத்தினர்
என்று மக்கள் விசனம் தெரிவித்தனர்.இந்த விடயம் குறித்து மனிதஉரிமை ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.