இலங்கை சமுர்த்தி அதிகாரசபையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது.
சிறுவர் மற்றும் பெண்கள் விவகார மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுமற்றும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் என்பன கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டபோது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (09) கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்தாதது குறித்து கோபா குழு கேள்வி எழுப்பியது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் கேட்ட போது, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விடயத்தை கையாள முடியும் எனக் கோபா குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி அதற்கான பதில்களை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் பரிந்துரைத்தார்.
அத்துடன் அஸ்வெசும வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் என்பவற்றை இணைந்து செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மானியம் வழங்கப்படுவதாகவும், அதே குறைந்த வருமானம் பெறுவோர் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வலுவூட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே இந்த இரண்டு திட்டங்களையும் கூட்டாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோபா குழு வலியுறுத்தியது. இது தவிர சமுர்த்தி வங்கிகளின் பங்களிப்பு மற்றும் அஸ்வெசும கொடுப்பனவை சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.