ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பதால் விசேட வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகள் பெறும் சகாப்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இந்நாட்டில் உள்ள வர்த்தகர்களுக்கு சம நிலையில் போட்டித் தன்மை வாய்ந்த வாய்ப்பை வழங்க வேண்டும் போலவே இந்த முன்னேற்றத்தில் உழைக்கும் மக்களும் பங்குதாரர்கள் ஆக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊழல், மோசடி, திருட்டு என்பன ஒழிக்கப்பட்டு, இந்நாட்டை அழித்த ஊழல் கும்பல்களால் கொள்ளையடிக்கப்பட்ட நிதியை நாட்டுக்குத் திருப்பி எடுத்து அந்தத் திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்காக இழந்த வளங்களை மீளப் பெறுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (17) கூட்டப்பட்ட குழுவின் இலங்கை வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பணக்காரர்கள் மட்டுமல்ல, சாமானியர்களும் பங்குச் சந்தையில் ஒரு சிறிய பங்கையேனும் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை தான் கொண்டுள்ளதாகவும், இதன் ஊடாக இளைஞர் சமூகம் பொருளாதாரப் பயணத்தில் அங்கம் வகிப்பதுடன் அது எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இலாபத்தில் ஒரு பகுதி உழைக்கும் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
செல்வந்தர்கள் மட்டுமே பலமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் தன்னிடம் இல்லை என்றும், இத்தகைய கொள்கைகளைக் கொண்ட நபர்களால் பெரும் பணக்காரர்களுக்கு 600 முதல் 700 பில்லியன் வரை வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு, நாட்டின் அரசாங்க வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு,நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும், இந்த முறை மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி காலாவதியான கட்டமைப்பிற்குள் செயல்படவில்லை என்றும், மாறாக எதிர்கால தொலைநோக்கு பார்வையும் தொழிலாளர்களுக்கு ஆதரவான மக்கள் சார் பயணம் என்றும், இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும், வர்த்தக உரிமையாளர்களும் தொழிலாளர் சமூகமும் ஒருவரையொருவர் சந்திக்கும் கலந்துரையாடல் அரங்கமாக அடுத்த அமர்வை நடத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.