முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாட்டுகளை மேற்கொள்ள இடமளித்த பௌத்த தேரர்களுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு பௌத்த மதத்தை மதிக்கும் உண்மையான பௌத்த தேரர்களே தேவை எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (18.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் போதே மேர்வின் சில்வா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், பௌத்த மதத்தின் மீது மற்றும் விகாரைகள் மீது கை வைத்தால் தமிழர்களின் தலைகளை வெட்டுவேன் என கூறினேன்.
அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நான் இதையே தான் கூறியிருந்தேன். இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை.
இன்று வடக்கு மற்றும் கிழக்கிலிருக்கும் விகாரைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. விகாரைகள் இருந்த இடங்களில் கோவில்கள் கட்டப்படுகின்றன. கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நான் இனவாதத்தை தூண்ட விரும்பவில்லை, எனினும் தற்போது இலங்கைக்கு பௌத்த மதத்தை மதிக்கும் உண்மையான பௌத்த தேரர்கள் தேவை.
பௌத்த மதத்ததை மதிக்கும் மற்றும் உண்மையான சிங்களவராக தம்மை வெளிக்காட்டிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரை போன்று தேரர்கள் செயல்பட்டிருக்க வேண்டும், உண்மையான பௌத்த எண்ணம் மனதில் இருக்குமாயின் இவ்வாறான செயல்கள் இடம்பெற யாரும் இடமளித்திருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.