3 வருடங்களில் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் 8,145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டி உள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. இந்த வீட்டுத் திட்டங்கள் கடந்த 2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம், மிஹிந்து நிவஹன, விரு சுமித்துரு செவன, சேவாபிமானி உள்ளிட்ட 15 வீடமைப்பு உதவித் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீட்டுத் திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18,717.771 மில்லியன் ஆகும். இதுவரை 16,409.667 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீடமைப்புத் திட்டத்திற்கான நிதிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டங்களுக்கு திறைசேரி நிதிகள், செவன நிதிகள், உள்ளக உற்பத்தி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலம் வீடமைப்பு திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வீடுகளை விரைவாக பூர்த்தி செய்யுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதுவரை புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். எஞ்சிய 8,145 வீடுகளை கட்டி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட போராட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த வீட்டுத் திட்டங்களில் பலவற்றின் கட்டுமானப் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை.
ஆனால் தற்போது நாடு மீண்டு, பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. எனவே திறைசேரிக்குச் சுமை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.