லயன் குடியிருப்பில் இருந்த மக்களின் தற்காலிக வீடுகளை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் அடித்து நொருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது, மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்தை லயன் குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் ஒரே லயன்
அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். தமக்கு வீடொன்றையோ வீடமைக்கக் காணி துண்டு ஒன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக்குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.
அவ்வகையில் தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர், ஓர் இடத்தைக் காட்டி இங்கு வீடமைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து, அவர்கள், வாழை உள்ளிட்ட சில பயிர் செய்கையை அவ்விடத்தில் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்னர் அங்கு தற்காலிக வீடு ஒன்றையும் அமைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று அங்கு சிலருடன் சென்ற உதவிமுகாமையாளர், அந்தக் குடியிருப்பை உடைத்து பொருள்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தினார். உதவி முகாமையாளர் உட்பட இருவர்
இணைந்து வீட்டை உடைத்துப் பொருள்களைச் சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மேலும் அந்த உதவி முகாமையாளரின் நடவடிக்கை குறித்து உரிய அதிகாரிகளுக்குப் பாதிக்கப்பட்ட
மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு பல தரப்புகள் மத்தியிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து உதவி முகாமையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்று தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காணொளிக்கான லிங்க்