ரணில் ஆளும் வர்க்கத்தின் இறுதி துடுப்பாட்ட வீரர் – அவரை அகற்றவேண்டுமென்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருக்கின்றார். இதேவேளை, டலஸ் அழகப்பெரும அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்க எதனை நோக்கிச் செல்கின்றார் – அவருடன் யாரெல்லாம் கூட்டுக்குத் தயாராக இருக்கின்றனர் என்பதை இப்போதைக்குத் தெளிவாக ஊகிக்க முடியாது – ஆனால், அவர் மொட்டு அணியுடன்தான் இப்போதும் ஏதோவொரு வகையில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறானதொருசூழலில் ராஜபக்ஷ சகோதரர்களும் தங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடயங்களை ஆழமாக நோக்கினால் தென்பகுதியின் பிரதான கட்சிகள் மத்தியில் ஓர் அரசியல் மோதல் இடம்பெற்றுவருவதை காணலாம். இந்த மோதல் பெருமளவுக்கு இரகசியமாகவே இடம்பெறுவது போல் தெரிகின்றது. இந்த மோதலில் புதிய கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் கட்சிகளில் அதிருப்தியுடன் இருக்கும் செல்வாக்குள்ள தனிநபர்களை இலக்கு வைத்தும் பல்வேறு நகர்வுகள் இடம்பெற்றுவருவதான தோற்றம் தெரிகின்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், தற்போதைய சூழலில் ஜனாதிபதித் தேர்தல் மும்முனை போட்டிக்கானதாகவே தெரிகின்றது. எனினும், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில்தான் தென்பகுதியின் அரசியல் மோதல் வெளியில் தெரியும். ஆனால், நிலைமைகள் ரணில் எதிர்பார்ப்பது போன்று இலகுவாக இருக்குமா என்பதிலும் சந்தேகங்கள் காணப்படுகின்றன.
ஆரம்பத்தில் இலகுவாக இருப்பதான ஒரு தோற்றம் தெரிந்தது. ஆனால் தற்போது, சிங்கள தேசியவாத சக்திகள் மீளவும் தங்களை ஒருங்கிணைத்து வருகின்றன. இதற்கான வாய்ப்பை வழங்கியதிலும் ரணிலுக்கு பங்குண்டு.ஏனெனில், 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக ரணிலின் அறிவிப்பைத் தொடர்ந்தே அதுவரையில் எவ்வாறு மீளவும் ஒருங்கிணைவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த சிங்கள பௌத்த கடும்போக்கு தரப்புகள், தற்போது தமிழர்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கக்கூடாதென்னும் சுலோகத்துடன் வீதிக்கு வந்திருக்கின்றன.
தமிழ் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் ரணில் முன்வைத்த விடயமொன்று அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றதா அல்லது ரணில் இந்த நிலைமையை எதிர் பார்த்திருந்தாரா? அவ்வாறு விடயத்தை அறிந்துகொண்டுதான் ரணில் இதனை செய்திருக்கின்றார் என்றால், இதனால் ரணில் அடையப் போகும் நன்மை என்ன? வேறு வழியில்லாமல் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் தனக்குத்தான் வாக்களிப்பார்களென்று அவர் கருதுகின்றாரா? தென்னிலங்கையின் அரசியல் மோதல் தொடர்பில் தமிழ் தரப்புகள் எவ்வாறான பார்வையை கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலை, தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்? இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்களைத் தயார் செய்திருக்கின்றனவா? அல்லது வழமைபோல் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர்தான் நித்திரையிலிருந்து எழுவார்களா? உண்மையில், அடுத்த ஜனாதிபதி தேர்தல் தமிழர்களுக்கான பேரம் பேசும் அரசியலுக்கான துருப்புச்சீட்டாக இருக்கும். ஆனால், பயன்படுத்தினால் மட்டும்தான் அதற்கு பெயர் துருப்புச் சீட்டு.