காலி சிறைச்சாலையில் பரவி வரும் ஒரு வகையான நோய் தொற்று நிலைமை காரணமாக கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கைதிகள் இருவர் உயிரிழந்தமை பற்றீரியாவால் ஏற்பட்ட நோய் தொற்று நிலைமை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொற்றைக்கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அண்மையில் பதிவாகியிருந்தது.
கைதிகளின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கராபிட்டிய வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலைகளுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில்,
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் இருவர் கடந்த 13 ஆம் திகதி மற்றும் 20 ஆம் திகதி உயிரிழந்திருந்தனர். தற்போது மேலும் தொற்றுக்குள்ளான 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான 9 பேர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நோய் தொற்று அறிகுறிகள் கொண்ட மேலும் 7 பேர் சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோய் நிலைமை காணப்படும் கைதிகள் தனித்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அனுப்பட்டுள்ளது. அவர்களின் நோய் நிலைமை கண்டறிந்து மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் சிறைச்சாலை நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன என்றார்.
இந்நிலையில் சிறைச்சாலையின் கைதிகளுக்கு இடையில் பரவியுள்ள நோய் மெனிங்கோகோகல் பற்றீரியாவால் ஏற்பட்ட நோய் தொற்று நிலைமை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பற்றீரியா எவ்வாறு சிறைச்சாலைக்குள் பரவியது என்பதிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கைதியொருவர் ஒரு கிழமைக்கு பிறகு சுகயீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞர் ஒருவராவார்.
இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்து முதலாவதாக தொற்று பரவி உள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்புகளை பேணியவர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளோம். முடியுமான அளவுவிரைவாக நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு நடவடிக்கைகளுக்காக காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வதை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவசர சந்தர்ப்பங்களில் கைதிகள் நிகழ்நிலை (சூம்) மூலம் விசாரணைகளுக்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.