நாட்டில் ஊடகவியலாளர்களுக்கான ஊடக உரிமை பறிக்கப்பட்டு வருகின்றதற்கு சான்றாக நேற்றைய தினம் மயிலைத்தமடு மாதவனை பகுதியில் மும்மத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை சிறைபிடித்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது .
ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகள் வெளிவந்தால் அந்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத காடழிப்பு போன்ற விபரங்கள் வெளிவரும் என்பதோடு அவர்களுடன் சேர்ந்து இயங்கும் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோத்தர்களின் சட்ட விரோத செயற்பாடுகளும் வெளிவந்து விடும் என்பதற்காக முழுக்க முழுக்க சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஊடகவியலாளர்களையே இலக்கு வைத்தனர்.
ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களிடம் இருந்த புகைப்பட கருவிகள், தொலைபேசிகளை பறிப்பதற்கு முயற்சி செய்ததோடு ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதங்கள் எழுதி கையெழுத்து வேண்டியும் எடுத்தனர்.
ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகளை எங்கும் பிரசுரிக்க கூடாது என்று கூறி கடிதம் எழுதி கையெழுத்தும் வைக்க சொல்லி அச்சுறுத்திய சம்பவம் மற்றும் ” உங்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ வெளியே வருமானால் உங்களை கொன்று புதைத்து விடுவேன்” என குறித்த தேரர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்கள் இலங்கையில் ஊடாக சுதந்திரம் என்பது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறது.