பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான முறுகல்களுடன் தனிநபர்கள் மற்றும் நிறுவகங்களுக்கு இடையேயான வணிக பரிவர்த்தனைகளால் எழும் நிதிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட வகையான மத்தியஸ்த சபைகளை நிறுவ நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது
கொழும்பு, கம்பஹா, கண்டி, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட மத்தியஸ்த சபைகள் செயற்படவுள்ளன.
5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பண மதிப்புள்ள பரிவர்த்தனை பிணக்குகள் மாத்திரமே இங்கு தீர்க்கப்படும்.
இந்த மத்தியஸ்தர்களின் நிதிக் குழுவில் உறுப்பினராக நியமிக்கத் தேவையான தகுதிகள் குறித்த முன்மொழிவுக்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்படி குழு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று (23) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
14 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி எண் 2314/80 இல் தொடர்புடைய தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, வயது 35 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாளர் அதிகாரி நிலைப் பதவியை வகிக்கும் அல்லது வகித்த அதிகாரியாக இருக்க வேண்டும்.
மேலும் தனியார் துறை, அரசு சாரா நிறுவனம், வங்கி அல்லது கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் சிரேஸ்ட முகாமையாளர் பதவியை வகித்தவராக இருக்க வேண்டும்.
ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தால் அல்லது அதன் கீழ் நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அல்லது கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, மத்தியஸ்தர்களின் நிதிக் குழுவில் உறுப்பினராகச் செயல்பட நல்ல மன மற்றும் உடல் நிலையில் இருக்க வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.