அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் ஆதரவு குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகின்றது.
டிரம்ப் ஆதரவாளர்களான புளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோருடன் டிரம்பை எதிர்க்கும் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் உட்பட பல வேட்பாளர்கள் குடியரசு கட்சியிலிருந்து களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர்களை உள்ளடக்கிய விவாத நிகழ்ச்சியொன்றினை தனியார் தொலைக்காட்சியொன்றுஅமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தியுள்ளது.
இதில் அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளதுடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
இதனை ஒரு பிரசார மேடையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்தவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பேசுபொருளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விவேக்கிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை குறிக்கும் விதமாக கட்சிக்கான நிதியளிப்பில் ஏராளமானோர் முன்வந்து நன்கொடையளித்து வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சி முடிந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே விவேக் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதரவாக சுமார் ரூ.4 கோடி ரூபாய் ($450000) இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது
பிரித்தானியானில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானது போல, அமெரிக்காவிலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபரானால், வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள் வெள்ளையர்களின் நாட்டை ஆள்கிறார்கள் எனும் சிறப்பு இந்தியாவிற்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.