மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி யொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவங்கேணி வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (62) வயதுடைய வீரக்குட்டி தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை கத்தியினால் குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற மண்டூர்
பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார்கள் மேற்கொண்டு வருகின்றனர்.