வடக்கு – கிழக்கின் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (27.08.2023) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமாகும்.
கடந்த காலத்தில் நாங்கள் இத்தினத்தில் வடக்கு – கிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த தடவையும் அதேபோன்று வடக்கில் மன்னாரிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்த பேரணிகளை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து எமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்காத நிலையிலேயே நாங்கள் இன்று சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி நிற்கின்றோம்.
இனிவரும் காலத்திலும் இந்த சர்வதேச நீதிப் பொறிமுறையினை கோரியே போராட்டத்தினை நடாத்தப்போகின்றோம்.
அதே போன்று இலங்கையில் இவ்வாறான கடத்தல்கள் எதிர்காலத்தில் நடக்காது என்ற உறுதிமொழியை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும். இதனையும் ஒரு கோரிக்கையாக கொண்டே பேரணியை முன்னெடுக்கவுள்ளோம்.
வடக்கில் உள்ளவர்கள் விரும்பினால் மன்னாரில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியும். அதேபோன்று கிழக்கில் உள்ளவர்கள் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்துகொள்ள முடியும்.
30 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் பேரணியானது காந்தி பூங்காவினை வந்தடைந்ததும் அங்கு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு நிறைவு பெறவுள்ளது. மட்டக்களப்பு போராட்டத்தில் பங்கு கொள்ளக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பினை விடுக்கின்றோம்.
எமக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது எமது எதிர்கால சந்ததிக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த பேரணிகளை நாங்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒழுங்குசெய்துள்ளோம். எமது பிரச்சினைக்கான தீர்வினை இலங்கை வழங்காத நிலையிலேயே நாங்கள் சர்வதேச பொறிமுறையினை நாடி நிற்கின்றோம்.
எங்களுக்கு நடந்த அவலங்கள் எதிர்கால சந்ததிக்கு நடக்ககூடாது என்பதே எமது நோக்காக இருக்கின்றது.
இந்த போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகள், முச்சக்கரவண்டி சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கள், இளைஞர், மகளிர் அமைப்புகள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும், எங்களது உறவுகளைத் தேடும் பயணத்தில் எம்மோடு பயணித்த தாய்மார் 187 பேருக்கு மேல் நாங்கள் இழந்து நிறங்கின்றோம். அதேபோன்று காலங்கள் கடத்தப்பட சாட்சியங்களும் அழிக்கப்படுகின்றன.
எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட சமூகமாக பல இன்னல்களுக்கும் மத்தியில், போராட்டங்களை நீத்துப் போகச் செய்வதற்கான பல்வேறு சதித் திட்டங்களும், அணுகுமுறைகளும், அழுத்தங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அண்மையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமங்க கூட கிழக்கில் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றவாறாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டேர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட இன்னும் ஐந்து பேருக்காவது நியாயம் வழங்கப்படவில்லை.
எமது உறவுகளின் உயிர்களை வெறும் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு நிர்ணயம் செய்ததே தவிர அந்த அலுவலகத்தினால் நியாயமான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
அந்த அலுவலகத்தை நாங்கள் முற்றாக நிராகரிப்பதுடன் ஜனாதிபதியின் இவ்வாறான கருத்து பொய்யானது என்பதையும், எமது மக்கள் இந்த மண்ணிலே பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து, இன்னும் தம் உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இப்போராட்டம் அவருக்கு வெளிப்படுத்தும்.
எனவே எமது உறவுகளைத் தேடும் இந்தப் பயணம் வடக்கு கிழக்கு இணைந்த பயணமாக இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தாய்மார் நாங்கள் ஒற்றுமையோடு எமது உறவுகளுக்கான நீதியைக் கோரி இந்தப் பேரணியை ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். எனவே எங்களுக்காக உரத்த குரல் கொடுக்க எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பதை மிகத் தாழ்மையுடனும் உரிமையுடனும் கோரி நிற்கின்றேன் என்று தெரிவித்தார்.