இந்தியாவிலிருந்து ரயில்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ்முன்னெடுக்கப்படுவதுடன், அது வெற்றிகரமாக முடிவுற்றால் அடுத்த வருடத்தில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய ரயில் சேவையை நடத்த முடியுமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாட்டு கடன்களை செலுத்தும் நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதும், தெற்கை போன்றே வடக்கு, கிழக்குக்கும் அபிவிருத்தியில் முன்னுரிமை வழங்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு நேற்று விஜயம் செய்த போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “30 வருட யுத்தம் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் ‘வடக்கு வசந்தம்’ மற்றும் ‘கிழக்கின் உதயம்’ போன்ற வேலைத்திட்டங்கள் பெருமளவு நிதி செலவில் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான நிதி கடன்கள் மற்றும் உதவிகள் மூலமாகவே பெறப்பட்டன.
அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டுக் கடன்களை நாம் இன்னும் செலுத்தி முடிக்கவில்லை. அதன் காரணமாக தற்போது நாடு பெரும்கடன் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அவ்வாறு கடன்களை மீளச் செலுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு இடம்பெறும்வரை எவ்வித வெளிநாட்டுக் கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது.
கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமே தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், போக்குவரத்து அமைச்சின் வேலைத்திட்டங்கள் உட்பட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் நாட்டுக்கு மீண்டும் வெளிநாட்டுக்கடன் கிடைத்தால்தான் முன்னெடுக்க முடியும். அதற்கான வேறு எந்த அரசியல் தீர்வும் கிடையாது.
2048ஆம் ஆண்டுவரை நாம் அந்தக் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. எந்த தலைவரின் கீழ் நாடு ஆளப்பட்டாலும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், கடனை மீளச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து விலக முடியாது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம், நட்பு நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் இணைந்துமேற்கொள்ளும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர் மீண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அந்த சந்தர்ப்பத்தில் தெற்கை போன்றே வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கும் விசேட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை புதிய ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் சில ரயில்களை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த பேச்சு
வார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுற்றால் அடுத்த வருடத்தில் கிழக்கு மாகாண மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்றும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.