அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் நேற்று (31) முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தை மற்றும் நிதி அறிவாற்றல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம். ரணசிங்க,இலங்கை பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.