“பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது அரசமைப்பிலேயே இல்லை – இது இந்தியாவுக்கும் தெரியும் –
இந்த விடயம் தொடர்பாக பகிரங்க விவாதத்துக்கும் நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அத்துடன், 13ஆவது திருத்தம் தீர்வல்ல என்று தமிழ்த் தரப்புகளாலேயே சொல்லப்படுகின்றது. இனப் பிரச்னைக்கு தீர்வை ரணில் விக்கிரமசிங்க கொடுப்பதாக உலகத்துக்குக்காட்டிக்கொள்ள வேண்டிய நேரத்தில் நாம் ஏன் 13ஆம் திருத்தத்தைப் பற்றிக்கதைக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில், அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு 13ஆவது திருத்தச் சட்டம் அரசமைப்பிலேயே இல்லை. 13 அரசமைப்பில் இருக்கிறதா இல்லையா என்று ஆய்வுசெய்யக்கூடிய – அது சம்பந்தமாக முடிவாக சொல்லக்கூடியது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றம் 1987ஆம் ஆண்டே தனது தீர்ப்பில் அதிகாரப்பகிர்வு ஒற்றையாட்சிக்குள் கிடையாது என்று சொல்லியுள்ளது. 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருப்பதால் அதிகாரப் பகிர்வு கிடையாது. அதிகாரங்கள் முழுக்க முழுக்க கொழும்பின் (மத்திய அரசின்) கையிலேயே இருக்கும்.
அந்த 9 நீதியரசர்கள் கொண்ட (பெரும்பான்மையானவர்களின்) தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு
கிட்டத்தட்ட 30 தீர்ப்புகள் வந்துள்ளன. இதில், 2014ஆம் ஆண்டு சோழமுத்து இராசனின் வழக்கில் பிரதம நீதியரசர் வழங்கிய தீர்ப்பில் – மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையிலே 13ஆம் திருத்தத்தில் முரண்பாடு வரமுடியாது.
ஏனென்றால், சட்டம் மிகத் தெளிவு – மத்தியின் கையில் மட்டுமே அதிகாரம். மாகாணத்துக்கு அதிகாரம் கிடையாது.காணி அதிகாரம் தொடர்பிலேயே மிக விசேடமாக இந்தத் தீர்ப்பு அமைந்தது.
தீர்ப்புகள் இப்படி மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ள நிலையிலே 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சொல்வது அப்பட்டமான பொய். அதை சொல்வதற்கானகாரணம் 13ஆம் திருத்தம் நடைமுறையில்தான் இருக்கிறது – உள்ளேதான் இருக்கிறது என்று வெளியில் சொன்னால், 13இல் ஒரு பிரயோசனமும் இல்லை என்று மக்களே விளங்கிக் கொள்வார்கள் என்பதுதான்.
இதன்போது குறுக்கிட்ட நெறியாளர்கள், ஆனால், 13இன் ஊடாக பல விடயங்களை தடுத்துள்ளேம். காணி,
பொலிஸ் அதிகாரத்தை தந்தால் சிலவற்றை செய்யலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் பலர் இந்த விடயங்களை ஏற்றுக்கொள்கிறார்களே என்று கேட்டபோது,“அவர்களை என்னுடன் விவாதிக்கவையுங்கள். என்னையும் வைத்துக் கொண்டு சொல்லட்டும் – அவர்கள் கூறும் அப்பட்டமான பொய்யை நேரடியாக தட்டிக்கேட்க ஒருவரும் இல்லாமல் பொய்யை ஏற்கிறார்கள். விவாதம் நடந்தால் தெரியும். ஆனால், இதனை
நான் மட்டும் கதைக்கும்போது பொய்யாக தெரியலாம் என்றவர், 1987 உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், 2014 சோழமுத்து இராசன் தனது காணி தொடர்பில் தொடுத்த வழக்குகளின் தீர்ப்பையும் வாசித்துக் காட்டினார்.
தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்த பிறகு மற்றவர்கள் கூறும் விடயத்தைக் கணக்கெடுக்கத் தேவையில்லை – என்றார்.இதைத் தொடர்ந்து, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் இந்தியாவுக்கும் இந்த விடயம் தெரியாதா என்று நெறியாளர் கேட்கையில், இது இந்தியாவுக்கும் தெரியும். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் தமிழ் கட்சிகளை சந்தித்தார். இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் உடன் இருந்தார். அப்போது, இந்த விடயங்களை நான் அவர்களுக்கு
சுட்டிக்காட்டினேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை மறுதலிக்கவில்லை. அப்போது அங்கிருந்த சுமந்திரன் உள்ளிட்டவர்களும் நான் கூறுவது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.
13ஐ வலியுறுத்தும் தரப்புகளே 13 தீர்வல்ல என்று சொல்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒரு தீர்வைக் கொடுப்பதாக உலகத்துக்குக் காட்டிக்கொள்ள வேண்டி நேரத்தில் நாம் 13ஆம் திருத் தத்தை பற்றி ஏன் கதைக்க வேண்டும் – என்றும் கேட்டார்.