இலங்கையில் மீண்டும் கலவரம் ஒன்று ஏற்பட்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் திரும்பிச்செல்ல விரும்பாது என தெரிவித்துள்ளார்.
பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் தொலைக்காட்சி நிலையமொன்றினால், ‘இலங்கையில் 1983 இல் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்ட இனக்கலவரத்தைப்போன்ற கலவரம் ஒன்று மீண்டும் ஏற்படுமா?’ என்று வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நான் இவ்வாறு கூறியதாக விக்கினேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
மேலும் ‘1983 இல் இலங்கையில் இடம்பெற்றதைப்போன்ற கலவரம் மீண்டும் உருவாகும் சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது நிலவிய சூழலுக்கும், தற்போதைய சூழலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. ‘போன்ற என்றால் போர்.
சமாதானம் என்றால் சமாதானம்’ என்று மாமனார் (முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன) கூறியதைப்போன்று இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கூறமுடியாது’ தற்போதைய சூழ்நிலையில் கலவரமொன்று உருவானால், அது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும், வெளிநாட்டு உள்ளீடுகளின் செயற்பாடுகள் நாட்டில் தீவிரமடையும் பட்சத்தில் கலவரமொன்று (அமைதியின்மை) உருவாகக்கூடும் என்றும், அப்போது இந்தியாவின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்படும் என்றும் குறிப்பிட்ட விக்கினேஸ்வரன், ‘எனவே இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தால் அவர்கள் மீண்டும் திரும்பிச்செல்லமாட்டார்கள்.
ஏனெனில் இலங்கையில் பிற வெளிநாட்டு உள்ளீடுகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்திருப்பதை அறிந்துகொண்டால், அவர்கள் திரும்பிச்செல்ல விரும்பமாட்டார்கள். அதனை ரணில் விக்கிரமசிங்கவும் நன்கறிந்திருக்கிறார்’ என்று தெரிவித்தார்.