போதைப்பொருளை ஒழிப்பதற்கான நிலையத்தை அமைப்பதன் தற்போதைய நிலைமை குறித்து நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் ஆராயப்பட்டது.
குறித்த குழு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஈசி காஷ் (ez cash) ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் மூலம் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகவும், இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் பணியில் சுதேச மருத்துவ அமைச்சின் ஆதரவைப் பெறுமாறு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், தபால் மூலம் போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவதைத் தடுப்பது, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தல், கடல் வழியாக போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டுவருவதைத் தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்தக் குழுவில் இணைந்துகொண்டதுடன், போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தேசிய பாதுகாப்போடு நேரடியாக தொடர்புடையது எனவும், இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.