ஒரு சில மதுபான உற்பத்தி நிறுவனங்களினால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டமையால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரிவருமான இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்தமை மற்றும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காலக்கெடு தொடர்பில் குழுவினால் பணிப்புரைகள் பல முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் பயன்பாட்டைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் போலியான ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலான பரிந்துரைகளைக் கொண்ட வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை செப்டெம்பர் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.