கோட்டாயா ராஜபக்ஸ அவர்கள் Tripoli Platoon என்கிற புலனாய்வு வலையமைப்பை மேஜர் Prabath Bulathwatte என்கிற அதிகாரி தலைமையில் உருவாக்கி இருந்தார். இந்த படையணியின் இணைப்பாளராக கோட்டாபய ராஜபக்சே மற்றும் அவரது தேசிய புலனாய்வுத் தலைவர் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் இருந்தார்கள். பிரிகேடியர் அமல் கருணாசேன, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஆகியோரும் மேற்படி படையணிக்கு பங்களிப்பு செய்தார்கள். இராணுவத்தினர் , பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, பல்வேறுபட்ட ஜிகாத் உறுப்பினர்கள் , புளொட் மற்றும் ராசிக் குழு உறுப்பினர்கள் என பலரும் மேற்படி வலையமைப்பில் உள்வாங்கப்பட்டனர்.
இராணுவம் செய்ய முடியாத இலக்குகள் பலவும் இந்த Tripoli Platoon வலையமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேற்படி Tripoli Platoon மூலம் தான் லசந்த விக்கிரமதுங்க , சிவராம், நடேசன் போன்றோரை வீழ்த்தினார்கள். பிரகீத் எக்னெலிகொட அவர்களை கடத்தி காணாமலாக்கினார்கள். வித்தியாதரன் , கீத் நொயார், உபாலி தென்னகோன் போன்ற் பலரை கடத்தி மோசமாக தாக்கினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ் , சிவமகாராஜா, ஜோசப் பரராஜசிங்கம் உட்பட பலரை கொன்றார்கள். திருகோணமலை விக்கினேஸ்வரன் உட்பட பல சிவில் தலைவர்களை இல்லாமலாக்கினார்கள். கொழும்பில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கூட கடத்தி காணாமலாக்கினார்கள். அதே போல வடக்கு கிழக்கு எங்கும் நூற்றுக்கணக்கானோர் எந்த கேள்விகளுமின்றி கடத்தினார்கள்.
இந்த தேச பணிகளுக்காக பிள்ளையான் குழுவினருக்கு மட்டும்மாதம் 3.5 மில்லியன் ரூபா
லெப்டினட் கேணல் மொகமட் ஊடக வழங்கப்பட்டு வந்தது. அதே போல மற்றைய தமிழ் மற்றும் முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கும் சம்பளங்கள் வழங்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக பிள்ளையான் உட்பட பலருக்கும்தமிழ் வர்த்தகர்களை கடத்தி பணம் பறிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் வடக்கு கிழக்கு மட்டுமின்றி தெற்கு முழுவதும் பணத்திற்காக வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர் . மட்டக்களப்பு , திருகோணமலையில் கப்பம் பெறுவதற்காக பாடசாலை குழந்தைகள் கூட கடத்தப்பட்டனர் .
இந்த Bulathwatte Unit ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இயக்கப்பட்டாலும் பின்னர் கொழும்பு மருதானைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சார்ள்ஸ் தலைமையில் EPDP உறுப்பினர்கள் Bulathwatte Unit யுடன் இணைத்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார்கள். இந்த குழுவினரே உதயன் பத்திரிகை மீதும் தாக்குதல் மேற்கொண்டார்கள் . மேற்படி கோர சம்பவங்களின் பின்னணியை நல்லாட்சி காலத்தில் குற்ற புலனாய்வு பிரிவை சேர்ந்த நிசாந்த சில்வா அடையாளம் கண்டு பிடித்தார். பத்திரிகையாளர்கள் லசந்த விக்கிரமதுங்க , பிரகீத் எக்னெலிகொட ,கீத் நாயர் போன்றோர் தொடர்புடைய பல குற்ற சம்பவங்களின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு Tripoli Platoon வலையமைப்பை அடையாளம் காட்டினார்.
ஜோசப் பரராஜசிங்கம் வழக்கில் பிள்ளையானுக்கு மேலதிகமாக தொடர்புபட்டு இருந்த இராணுவ அதிகாரியை அடையாளம் கண்டு பிடித்தார். தாஜ் சமுத்திர ஹோட்டல் வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்தாரி மற்றும் இராணுவ புலனாய்வார்கள் தொடர்பை கண்டு பிடித்தார். குருநாகல் வைத்தியர் Dr. Shafi அவர்கள் குற்றமற்றவர் என்பதையும் நிரூபித்தார். இதன் காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த அவர் கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரத்திக்கு வந்த முதல் நாளில் மட்டும் 16 தொலைபேசி வழி அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில் நாட்டை விட்டு வெளியேறினார். நேற்று Channel 4 ஆவணத்தில் தனது லசந்த மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பகிர்ந்து கொண்ட நிசாந்த சில்வா ராஜபக்சே குடும்பத்தின் குற்றச்செயல்கள் தொடர்பான பல்வேறு தரவுகளை தன் வசம் வைத்து இருக்கின்றார்.