இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு நேற்று (செப்.,07) அனுப்பியது. ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் (smart lander investigating moon) விண்கலம் ஏவப்பட்டது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா சார்பில் லூனா-25 மற்றும் இந்தியா சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் லூனா-25 தோல்வியடைந்தது; சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, ‘ஸ்லிம்’ எனப்படும் எஸ்எல்ஐஎம் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய திட்டமிட்டது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் ஏவவில்லை. மொத்தம் 3 முறை ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் (smart lander investigating moon) விண்கலம் நேற்று (செப்.,07) காலை 4.40 மணிக்கு ஏவப்பட்டது. இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.