பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற பதவியை இடை நிறுத்த வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குழுவொன்று சதித்திட்டம் செய்தால் அவர்களோடு நின்றவன் சாட்சியாக மாறினால் சட்டப்படி அவன் சாட்சியம் ஏற்கப்படும் என்ற வகையில் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டின் பிரகாரம் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை நாடாளுமன்றக் குழு அமைத்து விசாரிக்க சபாநாயகர் முன் வர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈஸ்டர் தாக்குதல் பின்னணி சம்பந்தமாக பிள்ளையானின் செயலாளராக இருந்த அசாத் மௌலானாவினால் சொல்லப்பட்ட விடயங்களை யாரும் இலகுவில் தட்டிக்கழிக்க முடியாது.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஐ எஸ் உரிமை கோரியுள்ளது என்ற பிள்ளையானின் கருத்தும் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். குண்டுத்தாக்குதல் இடம் பெற்ற போது இதற்கு ஐ எஸ் பொறுப்பெற்றதாக இந்திய இலங்கை ஊடகங்கள் கூறியிருந்தன. இதற்காக ஐ எஸ் தலைவர் பக்தாதியின் காணொளி உரை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர் அரபு மொழியில் தெளிவற்ற முறையில் ஏதோ பேச ஆங்கிலத்தில் பின்னணியில் ஐ எஸ் உரிமை கோருவதாக கூறப்பட்டது. அந்த வீடியோவில் ஐ எஸ் தலைவர் அவ்வாறு கூறினாரா அல்லது அது போலியானதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.
வேண்டுமென்றே ஐ எஸ் பயங்கரவாதிகள் மீது பழி போட்டு தப்பிக்கொள்ளும் முயற்சியா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஐ எஸ் பின்னணி இருந்திருந்தால் இது பற்றிய அவர்களின் அரபு மொழியிலான அறிக்கையை வெளியிடும்படி பிள்ளையானை கோருவதும் சபாநாயகரின் பொறுப்பாகும்.
ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை தாக்குதல்களா அல்லது அவை ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்பட்ட தாக்குதல்களா என்றும் விசாரிக்கப்பட வேண்டும். அப்பாவிகள் மீது எதுவித காரணமும் இன்றி தாக்குதல் மேற்கொள்வது இஸ்லாம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதை சாதாரண முஸ்லிம்களும் அறிவர்.
தீவிரவாதிகள் சிலர் 2017ம் ஆண்டு மட்டக்களப்பு சிறையில் இருந்த போது அச்சிறையில் இருந்த அவர்களுடன் அறிமுகமான பிள்ளையான் அவர்கள் பற்றி அசாத் மௌலானாவிடம் தெரிவித்தார் என்றும் அவர்கள் சிறையிலிருந்து வந்த பின் பிள்ளையானின் அறிவுறுத்தலுக்கிணங்க அவர்களை தான் தொடர்பு கொண்டு ஏனைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்ததாக மௌலானா கூறியுள்ளார்.
இவரது கூற்றுக்களை வைத்து பார்க்கும் போது இத்தாக்குதல்களின் பிரதான மூளையாக பிள்ளையானே செயல்பட்டுள்ளார் போல் தெரிகிறது. ஆகவே பிள்ளையான் ஒரு இராஜாங்க அமைச்சர் என்பதால் சபாநாயகர் குழுவொன்றை நியமித்து இது பற்றி விசாரிப்பதுடன் விசாரணை முடியும் வரை பிள்ளையானின் பதவியை இடை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி தங்களிடம் வினயமாக கோரிக்கை விடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.