மட/ககு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவினரால் மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டு. மட்டக்களப்பு சமூக ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் திரு. து. நிஜாம்டீன் அவர்களால் நடாத்தப்பட்டது.
இதன் போது மாணவர்கள் குறிப்பாக 14,15,16,17,18 வயதுடையோர் எவ்வாறு இப்பழக்கத்தற்கு அடிமையாகிறார்கள் என்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவணை என்பவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தில் குறிப்பாக பெண் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றியும் தெளிவு படுத்தினார்.
மேலும். மாணவர்களின் பாடசாலை வரவு மிக முக்கியம் எனவும் பெற்றோர் பாதுகாவல்களின் பதிலிறுப்புகள் இன்றி பாடசாலைக்கு மாணவர்கள் சமூகந் தராதவிடத்து அவர்கள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட முடியும் எனவும் தெரிவித்தததோடு, ஆண் மாணவர்களின் பொருத்தமற்ற வகையிலான தலைமுடி, தாடி வைத்திருத்தல் மற்றும் பச்சை குத்துதல் போன்ற பாடசாலை ஒழுக்கத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகவும் தம்மிடம் புகாரிடுமாறும் பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டதுடன் குறித்த பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலையங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்குரிய வகையிலான சிகையலங்காரங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பொலிஸ் பிரிவினருக்கு பிரதியிட்டு பிரதேச சபைக்கு கடிதம் அனுப்புமாறும் பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக பாடசாலை நாட்கள் மிக அழகானவை அதனை வீணடிக்காமல் வாழ்க்கையில் வெற்றிபெறுமாறு மாணவர்களை வாழ்த்தினார்.