‘ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் திசை திருப்பாதே; உண்மையை உலகறியச் செய்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்ஆதரவாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.மட்டக்களப்பு கட்சி காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி காந்தி பூங்கா வரையும் சென்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகப் பேச்சாளர்ஆஸாத் மௌலானா சனல் 4 ஊடகத்துக்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்புபட்டுள்ளார் என்று தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து கட்சி ஆதரவாளர்கள் நேற்று மட்டக்களப்பு, வாவிகரை வீதியிலுள்ள கட்சி காரியாலயத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்டு, “பிள்ளையானைக் குறிவைக்காதே”, “ஜ.எஸ். தீவிரவாதிகளைத் தப்ப வைப்பதற்கான சதியா?”, “புகலிடக் கோரிக்கையை நிறைவேற்றப் பொய் சொல்லாதே”, “சனல் 4 ஊடகமே ஆதாரமற்ற குற்றச்சாட்டை அடுக்காதே” போன்ற பல சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களையும்
எழுப்பினர்.
அங்கிருந்து பேரணியை ஆரம்பித்த அவர்கள், பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தைச் சென்றடைந்து அங்கிருந்து காந்தி பூங்காவை வந்தடைந்து சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.