மட்டக்களப்பு சவுக்கடி காமாட்சி அம்மன் கோவில் வீதியில் தற்காலிகமான கொட்டில்களில் வாழும் 8 குடும்பங்களுக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் துண்டுப்பிரசுரம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது இதுவரையில் தங்களுக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் எந்த காணிகளும் வழங்கப்படவில்லை எனவும் அத்துமீறி அடைத்து குடியேறியுள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம் என மட்டக்களப்பு காணிசீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் நே.நிமலராஜின் கையெப்பத்துடன் அந்த பிரசுரம் காணிகளின் வேலிகளில் ஒட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தெரியவருவதாவது கடந்த காலங்களில் மட்டக்களப்பு சவுக்கடியில் அரசியல் தலையீடுகளினால் பலரும் ஏக்கர் கணக்கான காணிகளை பிடித்திருந்தனர். இதற்கு எந்த அரசியல்வாதி பொறுப்பு என்றுகூட இதுவரையில் யாருக்கும் தெரியவும் இல்லை,போலிஸ் கூட இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இருப்பதற்கு சொந்த வளவு,வீடு இல்லாத சில மக்களால் மட்டக்களப்பு சவுக்கடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அங்கு பிரச்சனைகள் குறித்து ஆராய களவிஜயம் மேற்கொண்ட தற்போதைய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அங்கு மக்களுக்கு ஒரு உறுதி மொழி அளித்திருந்தார். அதாவது நீங்கள் தாராளமாக அந்த வளவுகளில் சென்று குடியேறுங்கள் எந்த பிரச்னையும் இல்லை என்று. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பேச்சை நம்பி அந்த 8 குடும்பங்களை சேர்ந்த மக்களும் குடியேறியிருந்தனர். இவர்களின் வறுமை நிலையை பார்த்து அன்றாட மனித தேவைக்கான வசதிகளை செய்து கொடுக்க நிறுவனர்கள், தனிநபர்கள் முன் வரும்போது இது LRC காணி யாரும் இங்கு குடியேற அனுமதி இல்லையென கூறிவந்த மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழு(LRC ) அவர்களை முற்றாக வெளியேறவேண்டும் என இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலில் திகதி (date ) என்று போடப்பட்டுள்ள பக்கத்தில் இன்றைய திகதி 13.09.2023 என்று அல்லாது 20.07.2023 என்று ஒன்றரை மாதங்கள் முந்திய திகதி போடப்பட்டிருத்தத்தை அவதானித்து எமது Battinaatham ஊடகம் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இத்திகதி இவ்வாறு போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தினை கேட்ட பொழுது அங்கு எங்களுக்கு பதில் அளித்த ஒரு ஊழியர் உங்கள் காணியிலா அந்த துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது என்று கேட்டார். அதற்கு எமது ஊடகத்தை சேர்ந்தவர் பதிலளிக்கும் போது இல்லை ஆனால் அந்த துண்டுப்பிரசுரத்தில் திகதி தொடர்பில் கேட்கிறேன் என்று கூறுகையில் நீங்கள் யார்? ஊடகம் என்றால் ஊடகத்தின் வேலையை மட்டும் செய்யுங்கள் என்று கூறினார். ஒரு ஊடகவியலாளர் இந்த வேலையை தவிர வேறு எந்த வேலை செய்ய முடியும் என்று கேட்ட பொழுது வேறு ஒருவர் அழைப்பில் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு எமது ஊடகத்தை சேர்ந்தவர் அந்த திகதி ஏன் அவ்வாறு போட்டுளீர்கள் என்று கேட்ட போது அது அவர்கள் அங்கு குடியேறி எங்களுக்கு தகவல் கிடைத்த திகதியை போட்டுள்ளோம் என்று கூறினார்.
இதை தொடர்ந்து எங்களுடன் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுகையில் இது குறித்து ஏற்கனவே அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் ஆனால் தாங்கள் இருக்கும் இடத்திலேயே அந்த காணியை பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற விடாப்பிடியுடன் இருப்பது தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்தோடு இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுடன் தொடர்பு கொண்டு கதைத்துள்ளதாகவும்,அமைச்சர் வியாழேந்திரன் எவ்வளவு விரைவாக இதனை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த விடயத்தை முடிக்கும் படி அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து குடியேறியுள்ள மக்களிடம் கேட்ட போது அவர்கள் தாங்கள் இராஜாங்க அமைச்சரின் பேச்சை நம்பியே இந்த இடத்தில் குடியிருப்பதாகவும்,தற்பொழுது இந்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருக்கின்றமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். அங்கு குடியேறிய அந்த குடும்பங்களின் நிலை இப்பொழுது கேட்பார் அற்றுப்போய் நிற்பது மட்டுமல்லாமல் அந்த குடும்பம்களுக்கு எதிரான நடவடிக்கையில் அரச அதிகாரிகள் இறங்கியுளார்கள் என்றே இந்த அறிவித்தல் மூலம் தெரியவருகிறது. ஒரு அரச திணைக்களத்தினால் வெளியிடப்படும் துண்டுப்பிரசுரத்தில் அது வெளியிடப்படும் திகதியே குறிப்பிடப்படவேண்டும்.ஆனால் இங்கு மாறாக குறித்த விடயம் தங்களிடம் கையளிக்கப்பட்ட திகதியினை குறிப்பிட்டிருக்கிறோம் எனக்கூறியது எந்தளவிற்கு உண்மைத்தன்மையான விடயமென தெரியவில்லை. ஒருவேளை மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நிலைப்பாடு இதுதான் என்றால் அமைச்சரை நம்பி குடியேறிய குறித்த 8 குடும்பங்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தான் வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன செய்ய போகிறார்?