உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாகக் கூறி – காலத்துக்குக் காலம் இது போன்ற குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தக் குழுக்களும் சில பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. ஆனால், அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததா – என்று கேட்டால் பதில் இல்லை. இந்தப் பின்னணியில் எல்லை தாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் ஒன்றின் மூலம் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியை பெறுவது தொடர்பில் இப்போது அனைவரும் பேசுகின்றனர். இந்த சம்பவத்துடன்
ராஜபக்ஷ தரப்புக்கு தொடர்பிருப்பதாக சனல் – 4 காணொலி வெளியானதைத் தொடர்ந்து எதிரணி அரசியல்வாதிகள் தொடர்ந்தும் இதுபற்றி கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டு மென்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியோ எதிர்கட்சிகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருக்கின்றார். ஆனால், இந்தக் குழுவின் விசாரணையும் வழமை போல் வரலாற்றின் குப்பை தொட்டிக்குள் பாதுகாக்கப்படும் – என்பதுதான் உண்மை.
இலங்கையில் காலத்துக்குக் காலம் பல்வேறு அதிகார அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ் மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இதேபோன்று அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இதுவரையில் இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எவருமே சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவில்லை. பதிலாக, குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பே வழங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் காலத்தின் வயதும் இலங்கை இனப்பிரச்னையின் வரலாற்றின் வயதும் ஒன்றுதான். இந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் எத்தனை விசாரணை குழுக்களை நாடு கண்டிருக்கின்றது. அந்தக் குழுக்களின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்பட்டு, அரசியல் ரீதியில் அதற்கான ஆதரவை வழங்கியிருந் தால் இலங்கைத் தீவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால், நடந்ததோ வேறு. காலத்தை இழுத்தடிப்பதற்கும் குற்றங்களை மறைப்பதற்குமே விசாரணைக் குழுக்கள் பயன்பட்டிருக்கின்றன. ஓர் அரசாங்கம் நியமிக்கும் விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து வரும் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை. அது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கலுக்காகவே மேற்கொள்ளப்பட்டதாகக்கூறி சாதாரணமாக அதனை குப்பை தொட்டிக்கு அனுப்பிவிடுவர்.
இந்த வரலாற்று பின்புலத்தில் நோக்கினால் குப்பைத் தொட்டிக்கு பயன்படுவதற்கான சில கடதாசிகளை தயார் செய்வதற்காக இன்னொரு குழு நியமிக்கப்பட்டிருக்கின்றதா – இப்படியொரு கேள்வியை கேட்குமாறே இலங்கையின் வரலாறு நம்மை நிர்பந்திக்கின்றது. பிரச்னை களைத் தீர்ப்பதற்கு பதிலாக பிரச்னைகள் இல்லையென்று கூறுவதிலும் அதற்கான சான்றுகளை காண்பிப்பதற்காக பணியாற்றுவதிலுமே இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்களின் காலத்தையும் ஆற்றலையும் செலவிட்டு வருகின்றனர். இதுதான் இந்தத் தீவின் பிரச்னை.