பிள்ளையான் ஊர்வலம் வருகிறார் என்று நினைத்து பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முஸ்லீம் மக்கள் சிலர் போராட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளனர்.
தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு நேற்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரையில் திலீபனின் நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவிலில் இருந்து யாழ். நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொத்துவில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்த நினைவேந்தல் வாகன ஊர்திக்கு மாலை 5 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில் முஸ்லீம் மக்கள் சிலர் பதாகைகள் ஏந்தியவாறு வீதிகளில் எதிர்ப்பு தெரிவித்து, பிள்ளையான் பொத்துவிலில் இருந்து ஊர்வலம் வருகிறார் அவரை நாங்கள் கட்டுப்படுத்தவேண்டும்.பிள்ளையான் என்பவர் இயக்கத்தை உண்டுபடுத்தி மீண்டும் பழைய பிரசினையை கொண்டுவர பார்க்கிறார் என்று கூறி திலீபனின் வாகன ஊர்திக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதேசமயம் இரண்டாம் நாளான இன்று (16.09.2023) களுவாஞ்சிக்குடியில் வாகன ஊர்திபவனி ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்குச் சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.