மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி மூன்றாது நாளாகவும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த புதன்கிழடை நடைபெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
கிழக்கை மீட்க வந்தவர்களே எங்கே சென்றீர்கள்? அரசே மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கு, காணிக்கொள்ளையர்களே மேய்ச்சல்தரையினை விற்றுவிட்டீர்களா? அரசே மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் குறித்த பகுதியில் தமது மூதாதையர்கள் தொடக்கம் பரம்பரை பரம்பரையாக முன்னெடுக்கப்பட்டுவந்த மேய்ச்சல் தரையினை இன்று அம்பாறை மற்றும் மொனராகலை,பொலநறுவை ஆகிய பகுதிகளிலிருந்துவந்து அத்துமீறி அபகரித்துவருவதை அனுமதிக்கமுடியாது என கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லாவிட்டால் எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கவுள்ள விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவ்வாறான நிலைமையேற்பட்டால் அதற்கான பொறுப்பினை உரிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே ஏற்கவேண்டிவரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்ட இடத்திற்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,குறித்த பிரச்சினைக்கு நாடாளுமன்ற அமர்வின் பின்னர் தீர்வினைப்பெற்றுத்தருவதாக உறுதியளித்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இதனை தாங்கள் ஒருபோதும் நம்பவில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.