ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. கடந்த சில நாட்களாக – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்தான் அனைவரும் விளங்கியோ – விளங்காமலோ பேசி வருகின்றனர். எதை வைத்து, அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கலாமென்று சிந்தித்துக் கொண்டிருந்த எதிரணியினரின் முன்னால் சனல் -4 பழமொன்றை தூக்கி பாலுக்குள் வீசியிருக்கின்றது. அவர்களும் பாலுக்குள் கிடக்கும் பழத்தை அவரவருக்கு ஏற்றவாறு கடித்துச் சாப்பிடுவதில் முட்டி மோதுகின்றனர். மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துவிட்டு ரணிலோ அமைதியாக அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதங்களையும் – அது தொடர்பான சர்வதேச விசாரணை கோரிக்கைகளையும் நோக்கும் போது, 2001 செப்ரெம்பர் 11ஆம் திகதி அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் நினைவுக்கு வருகின்றது. அந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் நமக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனாலும் நம்மையும் அந்தத் தாக்குதல் நிலைகுலைய வைத்தது. ஒரே நாளில் உலக அரசியல் ஒழுங்கு மாறிப் போனது. விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிர்காலத்தின்மீதும் சனி பிடித்துக் கொண்டது. அது ஒரு ஏழரைச்சனியென்பதை, அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் யுத்தத்தை ஆரம்பித்தபோதே அந்தச் சனியின் முழுப்பலமும் புரிந்தது. ஆனால், அப்போது புலிகளோ தப்பித்துக்கொள்ள முடியாத ஒரு கட்டத்துக்குள் பிரவேசித்திருந்தனர்.
இப்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று தேவையென்று எதிரணிகள் கூறுகின்றன. கத்தோலிக்க தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது சர்வதேச விசாரணைக் கோரிக்கையின் இரண்டாம் பாகம். முதலில் தமிழர்கள் சர்வதேச விசாரணையை கோரியிருந்தனர். கடந்த பதினான்கு ஆண்டுகளில் அதற்கான சிறு அசைவைக்கூட காண முடியவில்லை. ஆனாலும் சில பரிந்துரைகளை மனித உரிமைகள் பேரவை முன்வைத்திருந்தது. ஆனால் தற்போது, தமிழர்களின் கோரிக்கையை இரண்டாம் நிலைக்கு தள்ளக் கூடியவாறு, பிறிதொரு சர்வதேச விசாரணைக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக சனல் -4 வெளியிட்ட காணொலி ஒன்றுதான் இருக்கின்றது. இந்தக் காணொலியின் நம்பகத்தன்மை சிக்கலானது. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால், அந்த நபரின் கடந்தகாலமோ, நம்பத்தகுந்த ஒன்றாகவும் இல்லை. இவ்வாறானதொரு பலவீனமான சாட்சியை முன்வைத்து, ஏன் இவ்வாறானதொரு காணொலி வெளியிடப்பட்டது – கேள்விக்கு பதிலை காண்பதும் சிரமம். இந்த நிலையில் சனல்- 4 வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் காணொலியை மேற்குலக தூதரகங்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில், இந்தத் தாக்குதல் எல்லை தாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் வேலையென்பதில் அவர்களிடம் இரு வேறு கருத்துகள் இல்லை. இந்த நிலையில் சனல் -4இன் – ஈஸ்டர் காணொளி நிராகரிக்கப்படும்போது இறுதி யுத்தம் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியும் செல்லாக்காசாக நேரிடும்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் முன்னைய தாக்குதல் எவ்வாறு தமிழ் தேசிய அரசியலுக்கு சாபமாக மாறியதோ – அதேபோன்று, பிறிதோர் இஸ்லாமிய தாக்குதலான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை கோரிக்கையும் தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்ளும் நகர்வுகளில் ஒரு சாபமாக மாறுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.