2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் அமைத்து கொடுக்கப்பட்ட பகுதியே சுவிஸ் கிராமம் . இதிலிருந்து ஊறணி நோக்கிவரும் புகையிரத கடவை வீதியை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீதியை மூடும் பணிக்காக அரசினால் பணிக்கப்பட்ட அதிகாரிகளும் பொலிசாரும் அவ்விடத்திற்கு வந்த நிலையில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விடத்தில் சற்றுமுன் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
ஏற்கனவே குறித்த கடவை வீதியை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டும் மக்கள் மீண்டும் மீண்டும் போராட்டங்கள் நடாத்தியே பாதையை மூடவிடாது நீண்டகாலமாக மக்கள் அதனை பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது மீண்டும் நான்காவது தடவையாக இந்த பிரச்னை எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் திராய்மடு வைத்தியசாலை, பாலமீன்மடு வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் எதிர்கால பொது சேவை நிலையங்களும் உள்ளன. அவ்வீதியை தவிர்த்து வேறு வீதியை பாவிக்கும் போது சுமார் 1கிலோமீற்றர் மேலதிக தூரத்தினை கடந்தே செல்லவேண்டும் எனவும், சாதாரணமாக இவ்வீதியை உபயோகித்து பாடசாலைக்கு செல்லும் பிள்ளை 10 நிமிடத்தில் பாடசாலையை அடைந்து விடும் ஆனால் இவ்வீதிக்கு பதிலாக மாற்று வழியை உபயோகிக்கும்போது சுமார் 45 நிமிடங்கள் கழித்தே அப்பிள்ளை பாடசாலையை சென்றடைய வேண்டும் எனவும், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னை மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலையிலும் கூட மக்களை இவ்வாறு அலைக்கழிக்க வேண்டாம் எனவும் அங்கிருந்தோர் கவலை தெரிவித்தனர்.
பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் என்ன காரணத்திற்காக இவ்வீதியை மூட முற்படுகிறீர்கள் என அதிகாரிகளிடம் வினவியபோது, புகையிரத கடவையால் வாகனங்கள் கடந்து செல்கின்றபோது கடவை பள்ளமாகிறது என பதிலளித்துள்ளனர். உங்களுக்கு அதிகாரம் வழங்கியது யாரென கேட்டபோது மௌனம் காத்துள்ளனர். நாட்டில் எத்தனையோ புகையிரத கடவைகள் காணப்படும் நிலையில் இக்காரணம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றல்ல. இப்பிரச்னைக்கு தீர்வு காண வீதியை மூட நினைக்கும் அரசு. ஏன் மக்களை அலைக்கழிக்காமல் புகையிரத கடவை வீதியை புனர்நிர்மாணம் செய்ய தீர்மானிக்கவில்லை?
இவ்வீதிக்காக சுமார் 20 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கடத்த 10 வருடங்களுக்கு மேலாக இங்கு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் கூட இதை கண்டு கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த முறுகல் நிலை பல மணி நேரமாக நீடித்த அதே சமயம் வந்த ரயிலை மறித்து பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதில் புகையிரத ஓட்டுநருக்கும் பொது மக்களுக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதுடன் ஓட்டுநர் மது போதையில் இருந்தமை தெரிய வந்தது. வாய்தர்க்கத்தில், ”இதுவே தென்னிலகையாக இருப்பின் அடித்து தள்ளி போயிருப்பேன்” என புகையிரத ஓட்டுநர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் ,பொலிஸார் மற்றும் கிராமசேவையாளர் தலையீட்டில் உடைத்தப்பாதையை தற்காலிகமாக மக்களுக்கு செய்து தரப்பட்டதுடன் இந்த பிரச்சனைக்கான முக்கிய கூட்டமானது வரும் வாரம் மட்டக்களப்பு கச்சேரியில் சுவிஸ்கிராமம் வாழ் பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதுடன் சிறிது நேரத்தில் பொதுமக்கள் மறித்த கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரத்தையும் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
மக்களில் பிரச்சனைகளை தீர்க்கவே பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்கின்றனர். தேர்தல் என்றவுடன் மக்களின் வீடு வீடாய் வரும் அரசியல்வாதிகளில் ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. மக்களின் பிரச்சனைகளை மனுவாக கொடுத்தால் மட்டுந்தானா அதற்கான தீர்வை தருவார்கள். ஏன்? களத்திற்கு வந்து மக்களுடன் மக்களாக போராடி தீர்வை தர மாட்டார்களா?