மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் போதைபொருளுக்கு அடிமையாகிய 15 பேரை நீதிமன்ற கட்டளைக்கு அமைய கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் பெற்றோரிடம் பணம் கேட்டு வீட்டிலுள்ள சமையல் பாத்திரங்களை அடித்து உடைத்து தகராற்றில் ஈடுபட்டுவந்த நிலையில் அவரின் தொல்லை தாங்க முடியாமல் குறித்த இளைஞன் வீட்டிற்கு வருகின்ற போது பெற்றோர் அவருக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடி ஒழிந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அவரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர் உட்பட கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிவரையான 9 மாதங்களில் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 15 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை ஒரு வருடத்திற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைய அவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.