யூ டியூபில் வீடியோக்களை வெளியிடும் பயனர்களின் வசதிக்காக புதிய வீடியோ எடிட்டிங் சாஃப்ட்வேரை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பதிவர்கள் மிக எளிமையாக தங்கள் செல்ஃபோனில் இருந்தே இதை செய்துவிட முடியும். யுடியூபில் வீடியோக்களை பதிவிடும் பதிவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பதிவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் யுடியூப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Youtube Create என்ற இந்த புதிய ஆப்-ஐ பயன்படுத்தி ரீல்ஸ் வீடியோக்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் எளிமையான ஏஐ டூல்ஸ்களை பயன்படுத்தி முழுமையான எடிட்டிங் பணிகளையும் செய்ய முடியும்.
பதிவர்களின் வசதிக்காக ஆப் அறிமுகம் செய்வது சமூக வலைதளத்தில் புதுமையானது அல்ல. ஏற்கனவே சீனாவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களுக்காக CutCut என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் யுடியூப் தளத்தை நடத்தி வருகின்ற கூகுள் நிறுவனமும் பதிவர்களுக்காக புதிய வீடியோ எடிட்டிங் ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
You tube Create-ல் என்ன வசதி கிடைக்கும்?
பயன்படுத்துவதற்கு மிக எளிமையான கண்ட்ரோல் மற்றும் ஆப்சன்களை கொண்டதாக இந்த ஆப் இருக்கும். துள்ளியமாக வீடியோக்களை வெட்டுவது, வீடியோ நீளத்தை குறைப்பது, தானியங்கி முறையில் தலைப்புகளை உருவாக்குவது, வீடியோவுக்கான பின்னணி குரல் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள முடியும்.
இதுமட்டுமல்லாமல் எண்ணற்ற பில்டர்கள் மற்றும் உருமாற்றங்களை காட்டும் வசதிகளை பதிவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவர்களின் வீடியோ தரம் மென்மேலும் மெருகூட்டியதைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக, கட்டணம் ஏதுமற்ற இசை துணுக்குகளையும் யுடியூப் வலைதளம் வழங்குகிறது.
தொழில்நேர்த்தி கொண்ட ஒருவர் வீடியோ எடிட்டிங் செய்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு தரம் வாய்ந்ததாக வீடியோவை மாற்றும் வகையில் இந்த புதிய ஆப் இருக்கும். சாதாரணமாக ஸ்மார்ட்ஃபோன்களை கையாளத் தெரிந்தவர்கள் கூட இதனை பயன்படுத்தும் வகையில் ஆப்சன்கள் எளிமையாக வழங்கப்பட்டுள்ளன.
இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்:
Youtube Create ஆப்-ஐ பயனாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று யுடியூப் வலைதளம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் பேட்டா வசதி கொண்ட ஆண்டிராய்ட் சாதனங்களில் மட்டுமே இது கிடைக்கிறது.
அதிலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, இந்தியா, கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கும் வெகு விரைவில் புதிய ஆப்-ஐ அறிமுகம் செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. ஐஓஎஸ் வெர்சனுக்கான வீடியோ எடிட்டிங் ஆப்-ஐ அடுத்த ஆண்டில் யுடியூப் அறிமுகம் செய்ய உள்ளது.