மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி மீன் பிடி உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (30) கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வாடி பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.குறித்த மீனவரின் வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த நபர் தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குறித்த மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்) உள்ளடங்களாக அட்டை பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வாடியின் உரிமையாளர் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணுக்க விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பொருட்களை திருடிய நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர் திருடி விற்பனை செய்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.