முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமா செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக
அமைந்திருக்கிறது.
23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்தில், நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாலும் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாகவும்,குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிபதி சரவணராஜாவின் திடீர் பதவி விலகலின் முன்னர், அவர் குருந்தூர்மலை வழக்கை விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கானது தேசியளவில் பேசப்பட்ட வழக்காக மாறியிருக்கிறது, அல்லது மாற்றப்பட்டிருக்கிறது எனலாம்.
குருந்தூர்மலை விவகாரம் சி்க்கலானதொன்று. அது தனித்து ஆராயப்பட வேண்டியதொன்று. குருந்தூர்மலை (சிங்களத்தில் குருந்தி) விவகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவால் விசாரிக்கப்பட்டு வந்தது.
இனவாத அரசியல் மேவி நின்ற இந்த வழக்கில், நீதிபதி ரீ.சரவணராஜா மீது அரசியல் ரீதியிலான விமர்சனங்கள், குறிப்பாக தென்னிலங்கையின் பேரினவாத அரசியல் வாதிகளினால் முன்வைக்கப்பட்டமை கவலைக்குரியது. நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பிக்க தனது பாராளுமன்ற வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தி, நீதிபதி ரீ.சரவணராஜா மீதான கடுமையான விமர்சனத்தை பேரினவாதியான முன்னாள் அமைச்சர்சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். ஜூலை 9ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, “குருந்தூர்மலையிலிருந்து (யாழ்ப்பாணத்தில்) எங்களை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.
தொல்லியல் ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. இலங்கை சிங்களபௌத்த நாடு என்பதை நீதிபதி புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ஜூலை 14ம் திகதி குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோவிலில் பொங்கலை நிகழ்வு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த
நிலையில், அது திட்டமிட்ட வகையில் அங்கு வந்த பேரினவாதிகளால் குழப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறி, ஒரு தரப்பினரால் குருந்தூர்மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டது. தொடர்ந்து ஓகஸ்ட் 15ம் திகதி, குருந்தூர்மலையை அண்டிய மக்கள் ஆதி ஐயனார் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்வதற்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் நிராகரித்திருந்தது. தற்போதுள்ள தொல்லியல் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த அப்பகுதி மக்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓகஸ்ட் 18 நடந்த பொங்கல் வழிபாட்டைக் குழப்பும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 20 அளவில், முல்லைத்தீவு நீதவான் ரீ.சரவணராஜாவுக்கு எதிராக இலங்கை
நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது. பேரினவாத பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர முன்னிலையில் , “ஓகஸ்ட் 18ஆம் திகதி குருந்தூர்மலையில் இந்து சமய வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜா ஒரு தலைப்பட்சமாகவும் பொறுப்பற்றவராகவும் செயற்படுகின்றார். மறுபுறம், தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை அவர் கவனிக்கவில்லை” என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இந்த நிலையில் ஓகஸ்ட் 22ல், பேரினவாதி சரத் வீரசேகர, மீண்டும் தனது பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்குள் ஒளிந்து கொண்டு, நீதிபதி சரவணராஜா மீது பாராதூரமான தாக்குதலை தனது பாராளுமன்ற பேச்சில்
நடத்தினார்.
“முல்லைத்தீவு நீதவான் மனநலம் குன்றியவர். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நீதி அமைச்சும்
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் இதனைஆராய்ந்து வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும்” என்று பகிரங்கமாகவே பாராளுமன்றத்தில் ஒரு நீதிபதியை சரத் வீரசேகர மிக மோசமான முறையில்
விமர்சித்தார்.
இந்தப் பின்னணியில்தான் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் சில ஊடகவியலாளர்களின் பதிவுகளில், நீதிபதி சரவணராஜா பதவிவிலகிவிட்டு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டதாகவும், சரத் வீரசேகர உள்ளிட்ட பெரும்பான்மையினத்தவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், தனக்கான பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும், புலனாய்வுத்துறை தன்னை கண்காணிப்பது தொடர்வதாகவும், சட்டமா அதிபர் தன்னை சட்டமா அதிபரின் அலுவலகத்திற்கு 21.09.2023 அன்று வருமாறு அழைப்புவிடுத்து, அந்த சந்திப்பின் போது, குருந்தூர்மலை வழக்கில் தனது ஆணைகளை மாற்றியமைக்க அழுத்தம் தந்ததாகவும், தனக்கெதிராக இரண்டு
வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்கள்.
நீதிபதி சரவணராஜாவிடமிருந்த உத்தியோகபூர்வமாக இந்த விடயங்கள் அறிவிக்கப்படாதவரை, இந்த சமூக
ஊடகவியலாளர்களின் பதிவுகள் ஐயத்துடனேயே அணுகப்பட வேண்டியவையாகின்றன.
நீதிமன்றையும், நீதிபதிகளையும் தனது பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்குள் ஒளிந்துக்கொண்டு தாக்கும் சரத்வீரசேகரவின் ஈனச்செயலை ஆளும் அரசாங்கம் கண்டித்திருக்க வேண்டும்.
சபாநாயகர் அதனைத் தடுத்திருக்க வேண்டும். அவரது பதவிவிலகலுக்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமளவிற்கு அரசியல் நாகரீகமடைந்த நாடாக இலங்கை
இன்னும் வளரவில்லை. பேரினாவதமும், காட்டுமிராண்டித்தனமும் நிறைந்த நாடாகத்தான் இலங்கை இருக்கிறது என்பதற்கு, சரத் வீரசேகர போன்ற அப்பட்டமான பேரினவாதி, தலைநகரில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றமையே பெரும் எடுத்துக்காட்டு.
கொழும்பு என்பது பெரும்பாலும் நாகரீகமடைந்த, தாராளவாத தன்மைகள் நிறைந்த இடம் என்ற மாயத்தோற்றம் பலருக்கும் இருக்கலாம். அது அப்படியில்லை என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டுக்கள் இந்நாட்டின் மிகப்பெரிய பேரினவாதிகளான சரத்வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் எல்லாம் கொழும்பையே பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்!
ஒரு நீதிபதி பேரினவாதத்திற்குப் பயந்து பதவியைத் துறந்துவிட்டு நாட்டைவிட்டு ஓட வேண்டுமென்றால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது பேரினவாதிகளின் காட்டாட்சி நடக்கிறதா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே. நிற்க.மறுபுறத்தில், மேற்சொன்ன சமூக ஊடகவியலாளர்களின் பதிவு உண்மையென்றால். அதில் சில சிக்கலான கேள்விகள் எழுகின்றன. ஒரு நீதிபதி, ஏன் சட்டமா அதிபரை சென்று சட்டமா அதிபரின் அலுவலகத்தில் சந்திக்க வேண்டும்? சரி, தனக்கெதிரானவழக்கில் தன் சார்பாக சட்டமா அதிபர் வழக்காடுகிறார் என்பதன் நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்தால், அதைத்தாண்டி தான் விசாரிக்கும் வழக்குகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்திருக்கலாமே? சட்டமா அதிபரே அதைப்பற்றி பேச முயன்றிருந்தாலும், இல்லை நான் விசாரித்துக்கொண்டிருக்கும் வழக்குகள் பற்றி பேசுவது முறையல்ல என்ற தவிர்த்திருக்க வேண்டும். சட்டமா அதிபர்அச்சுறுத்தல் விடுத்திருந்தால், அதைப்பற்றி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அறிவித்திருக்கவேண்டும். உயிர் அச்சுறுத்தல் இருந்தால், அது பற்றி பொலிஸிற்கும், நீதிச்சேவைம் ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும்
முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
இதுதானே நடைமுறை? நீதிபதி சரவணராஜா இதைக்கூட ஏன் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் பலராலும் எழுப்பப்படும். இவற்றையெல்லாம் செய்யாமல், அவர் பதவி விலகிவிட்டு நாட்டை விட்டு வௌியேறியது உண்மையென்றால், வௌிநாட்டில் தஞ்சம் கோருவதற்காகத்தான் அவர் இதனைச் செய்தார் என்ற பிரச்சாரத்தை அவர் எதிர்கொள்ள வேண்டிவருவது தவிர்க்க முடியாததாகும். இது துரதிஷ்டவசமானது.
இலங்கை அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான சந்தியில் நிற்கிறது. நாட்டின் கடந்த காலம் இன மற்றும்
மத பதட்டங்களால் சிதைக்கப்பட்டது. பெரும்பான்மையினர் சிறுபான்மை சமூகங்களின் மீது அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்தி, தமது நலன்களை முன்னிறுத்துகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வானது, பாகுபாடு, ஓரங்கட்டப்படுதல் மற்றும் வன்முறையின் சுழற்சிக்கு வழிவகுத்தது. சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தடுத்து வருகிறது.
உண்மையிலேயே முன்னேற்றம் அடையவும், செழிப்பைத் தழுவவும், பெரும்பான்மையின மேலாதிக்கம் என்பது இல்லாது அமைய வேண்டும். ஒரு நாட்டின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது, இலங்கையும்
இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து இன மற்றும் மத குழுக்களுக்கும் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், இலங்கை தனது மக்களின் கூட்டு ஆற்றலைப் பயன்படுத்தி,
புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்க்க முடியும். உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையைத் தழுவுவது கடந்த காலத்தின் காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல், பிரகாசமான மற்றும்
மிகவும் இணக்கமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். அதைவிடுத்து வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறினால், இலங்கைக்கு முக்தியல்ல!