நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியால் ஐ. சி. சி. கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் அவசியமான 10 புள்ளிகளை இலங்கை இழந்தது. இதனால், உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன், ரிம் சௌதி, டெவன் கொன்வே, மைக்கல் பிரஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதனால், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களை குவித்தது. 30ஆவது ஓவரில் 5ஆவது விக்கெட்டை இழந்தபோது நியூசிலாந்தின் மொத்த எண்ணிக்கை 152 ஓட்டங்களாக இருந்தது.எனினும் கிளென் பிலிப்ஸ், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திர ஆகிய இருவரும் 6ஆவது விக் கெட்டுக்காக 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்வரிசை வீரர்கள் சொதப்பியபோதும் 50 ஓவர்கள் நிறைவில் 274 ஓட்டங்களை குவித்தது.இதில், பின் அலன் 51 ஓட்டங்கள், ரச்சின் ரவிந்த்ர 49, டெரில் மிற்செல் 47, கிளென் பிலிப்ஸ் 39, வில் யங் 26 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.இலங்கையின் பந்துவீச்சில் சாமிக கருணாரட்ன 4 விக் கெட்களையும் கசுன் ராஜித, லஹிரு குமார தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.அஞ்சலோ மத்தியூஸ் 18 ஓட்டங்கள், சாமிக கருணாரட்ன 11 ஓட்டங்கள், லஹிரு குமார 10 ஓட்டங்கள் ஆகியோரே இரு வரிசை ஓட்டங்களைப் பெற்றனர்.
நியூசிலாந்து பந்துவீச்சில் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்களையும் டெரில் மிற்செல், ப்ளயார் டிக்னர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஹென்றி ஷிப்லி தனது அதிசிறந்த பந்து வீச்சுப் பெறுதியைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.