திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கணேசபுரம் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயிர் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளன.
இதன் போது மரவெள்ளி, வாழை போன்ற பயிரினங்களை துவம்சம் செய்துள்ளது. அத்தோடு அங்கிருந்த துவிச்சக்கர வண்டியையும் மிதித்து சேதமாக்கியுள்ளது.
இக்கிராமத்தில் தாம் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பயிர்ச் செய்கை மேற்கொண்டு வரும் நிலையில் காட்டு யானைகள் சேதம் விளைவிப்பதாகவும்,யானை வேலி அமைத்துத்தரப்படுமென பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இன்னும் யானை பாதுகாப்பு வேலி அமைத்து தரப்படவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர் .
இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என மூதூர் – கணேசபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.