மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக எமது Battinaatham ஊடகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது. கடந்த வாரங்களிலும் அதற்கு முன்பும் அரச தொழில் பெறுவதற்காக, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஏனைய படைத்துறை என்பவற்றில் சேர்வதற்காக மருத்துவ சான்றிதழினை பெற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்களை அங்கு கடமையாற்றும் வைத்தியர்களும் தாதியர்களும் ஒழுங்கான சேவையினை வழங்காது அவமரியாதையாக நடத்துவதாக முறைப்பாடொன்று கிடைத்திருந்தது.
மருத்துவ சான்றிதழினை பெறச் செல்பவர்களிடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களும் தாதியர்களும் ”மருத்துவ சான்றிதழினை பெற எத்தனையோ இடங்கள் இருக்கின்றபொழுது நீங்கள் ஏன் இங்கு வந்து எங்களை சிரமப்படுத்துகின்றீர்கள் என்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் மருத்துவ சான்றிதழினை பெற முடியும்’ என கூறுவதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக Battinaatham ஊடகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்.திருமதி.K. கணேசலிங்கம் அவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு இம்முறைப்பாடு குறித்து அவரது கருத்தினை கேட்டபொழுது அவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
மருத்துவ சான்றிதழ் வழங்குவது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பல சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. குறிப்பாக மருத்துவ சான்றிதழ் படிவத்தில் ” மருத்துவ சான்றிதழினை , ஆதார வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலை, போதனா வைத்தியசாலைகளில் எங்காவது பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டிருப்பதை கவனத்திற்கொள்ளாது பெரும்பாலானோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே வருகை தருகின்றனர். ஒவ்வொருவரும் அவர்களது சௌகரியத்திற்காக ஒரே இடத்தில் அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்து மருத்துவ சான்றிதழினை பெறலாம் என்று வருகின்றனர். அதேசமயம் மட்டக்களப்பிலிருந்து மாத்திரமன்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பெருந்தொகையானோர் வருகின்றபொழுது அவர்களை முகாமைத்துவம் செய்வது சிரமமாக இருப்பதாக வைத்தியர்களும் சிரேஷ்ட மருத்துவ அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர் என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், மட்டக்களப்பு நகர்ப்புறம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ளவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவ சான்றிதழினை பெறுவதில் எந்தவித பிரச்சனைகளும் இல்லை. ஆனால் ஆதார வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பிரதேச மக்கள் அங்கு தமது சேவைகளை பெற்றுக்கொள்ளாமல் போதனா வைத்தியசாலைக்கே வருகின்றனர். அதிலும் குறிப்பாக களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, அம்பாறை மற்றும் திருகோணமலையில் இருந்தும் வருகின்றனர். அதேசமயம் ஓட்டமாவடி, வாழைச்சேனை,ஏறாவூர் ஆதார வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள பிரதேச மக்களில் பெரும்பாலானோர் தமக்கான சேவைகளை தங்களது ஆதார வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்கின்ற அதேவேளை குறைந்தளவு எண்ணிக்கையானோரே இப்பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகின்றனர்.
மேலும் நாளாந்தம் அண்ணளவாக 300 தொடக்கம் 400 வரையிலான வெளி நோயாளர்களை பார்வையிடவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு பொறுப்பாக 7 வைத்தியர்கள் மாத்திரமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான வேலைப்பளுவிலும் நாம் எவரையும் திருப்பியனுப்பியதில்லை. ஒவ்வொரு பரிசோதனை அலகும் (Testing Unit) வைத்தியசாலையின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கின்றன. மருத்துவ சான்றிதழுக்காக வருபவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தனது பரிசோதனை அறிக்கையை எடுத்து கொண்டு இறுதியாக சிரேஷ்ட மருத்துவ அதிகாரியிடம் (SMO) வருகின்றபொழுது களைப்படைந்து உயர் இரத்த அழுத்தத்திற்குள்ளாகி விடுகின்றனர். அவர்களை சோதனையிட்டும் பொழுது உயர் இரத்த அழுத்தம் காணப்படுகின்ற பட்சத்தில் எம்மால் சாதகமான மருத்துவ அறிக்கையை வழங்க முடியாது போகின்ற நிலைமைகளுமுள்ளன. மேலும் அரச பல்கலைக்கழகங்களுக்கோ, தொழில் வாய்ப்பிற்கோ அரச வைத்தியசாலைகளிலிருந்து மட்டும் பெறப்படும் மருத்துவ சான்றிதழே கேட்கப்படுகின்ற நிலையில் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று மருத்துவ சான்றிதழினை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்களோ தாதியர்களோ கூறியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே இது தொடர்பில் மருத்துவ சான்றிதழுக்காக வருபவர்கள் சரியான விளக்கங்களை பெற்றுக்கொள்வது அவர்களது சிரமங்களை குறைக்கும் என நாம் கருதுகின்றோம்.