மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான மட் / புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை, மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரிகளிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் செய்வதையொட்டி மட்டக்களப்பு பிரதான சுற்றுவட்ட கோபுரத்திற்கருகாமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படம் அமைக்கப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட உருவப்படத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கிராமங்களான மயிலைத்தமடு மற்றும் மாதவனை பிரதேசத்திலுள்ள சிங்கள குடியேற்றவாசிகளும் பௌத்த பிக்குகளும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சிங்கள குடியேற்றவாசிகளால் மயிலைத்தமடு, மாதவனை பிரதேசங்களில் பயிர்செய்கை செய்வதற்காக உரிமை கோரிய நிலையில் குறித்த பிரதேச தமிழ் மக்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தை வாய்ப்பாக பயன்படுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது. தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் திரு. கணபதிப்பிள்ளை மோகன் இப்போராட்ட தளத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். அதன்போது ‘தமிழ் பண்ணையாளர்களின் பிரச்சினையை சவாலுக்கு உட்படுத்த முடியாது அவர்களின் போராட்டம் நியாயமானது என அம்பிட்டிய தோரிடம் தெரிவித்தார். எதையும் பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களே இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் அவரை போராட்ட தளத்திற்கு வரும்படி கோஷம் எழுப்பியவண்ணம் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.