ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால் அந்த வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்புரிமைப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என தீர்ப்பளித்துள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்து தீர்மானம் கிடைத்த பின்னர் சபாநாயகர் அதனை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
பின்னர், உரிய உறுப்பினர் வெற்றிடத்தினை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்ததையடுத்து, உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்தில் தனக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவிப்பார்.
2021 டிசம்பரில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 2வது வாசிப்பின் போது அப்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.