காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்தி வரும் தாக்குதில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி ப்ளிங்கன் இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக கூறியுள்ளார்.
ஜெர்மானிய படைகளிடமிருந்து உயிரை காப்பாற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக பாலஸ்தீனம் வந்தவர்கள்தான் இந்த யூதர்கள். வாழ்வதற்கு வழிதேடி வந்தவர்களை வரவேற்ற பாலஸ்தீன மக்கள், யூதர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தனர். இப்படி இருக்கையில் இரண்டாம் உலகபோரில் யூதர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக பிரிட்டன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க முன் வந்தது. இஸ்ரேல் உருவாக்கம் யூதர்களின் நீண்ட ஆண்டுகால எதிர்பார்ப்பு. இதை நிறைவேற்ற பிரிட்டன் ஆதரவளித்த நிலையில் பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் யூதர்கள் இறங்கினார்கள்.
இப்படி உருவான இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து ஜீரணித்துவிட்டது. சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தில் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகிறார்கள். காசா திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுத்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் அம்மக்கள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தனர். அப்படிதான் ஹமாஸ் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஏனெனில் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயம் நடக்கும் என இஸ்ரேல் ஏற்கெனவே கணித்துதான் ‘அயர்ன் ட்ரோம்’ எனும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்தது. இது ஏவுகணை தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும். ஆனால் ஹமாஸ் அமைப்பினர் ஒரே தடவையாக சுமார் 5000 ஏவுகணைகளை வீசியதால் இந்த ‘அயர்ன் ட்ரோம்’ அமைப்பு ஓவர் லோட் ஆகி பல்வேறு ஏவுகணைகளை தவறவிட்டுவிட்டது.
அவ்வளவுதான் இஸ்ரேல் இதற்கு பதில் தாக்குதல் தொடுக்க தன்னிடமிருந்த மொத்த ராணுவ பலத்தையும் திரட்டி வெறும் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தின் மீது 6வது நாளாக கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதாலால் ஏறத்தாழ 2,000 பாலஸ்தீனர்கள் வரை உயிரிழந்துள்ளனர். 4,000 பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை அரபு நாடுகள் கண்டித்துள்ள நிலையில், தனது அணு ஆயுத போர் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை’ அமெரிக்கா காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ (R08 Queen Elizabeth) என்ற 60 விமானங்களை தாங்கக் கூடிய போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப யோசித்து வருகிறது. மற்றொருபுறம் அரபு நாடுகள் ஓரணியில் திரள முயன்றுள்ளன.
சூழல் இப்படி இருக்கையில் இன்று இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டின் அதிபர் நெதன்யாகுவுடன் போர் குறித்து கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான பலத்தை நீங்களே கொண்டிருக்கலாம். ஆனால், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாக இருக்க வேண்டியது இல்லை. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்போம்” என்று கூறியுள்ளார். அதேபோல “நீங்கள் ஹமாஸ் படையுடன் சண்டையிடுங்கள். ஆனால் அதேநேரம் புதிய போர் முனையை திறப்பதன் மூலம் சிக்கலை உருவாக்கி கொள்ளாதீர்கள். ஒருவேளை இந்த விவகாரத்தில் ஹில்புல்லா நுழைந்தால், நாங்கள் உதவிக்கு வர தயார்” என அமெரிக்க அதிகாரிகள், இஸ்ரேல் ராணுவத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் படைகள் உள்ளே நுழைந்தால் நிச்சயம் ரஷ்யா தனது படைகளை ஈரானுக்கு அனுப்பி ஈரானிலிருந்து பாலஸ்தீனத்திற்கு உதவ சண்டை செய்யும். ரஷ்யாவுக்கு சீனாவும் ஆதரவளிக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.