நேற்று (12.10.2023) மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. அதில் மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சனைகள் பற்றியும் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண அவர் மேற்கொண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார். அவ்வேளையில் ”எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக தமிழ் மக்கள் குரல் எழுப்பும் நிலைமையை உருவாக்குவது எமது அரசினுடைய நோக்கமாக இருக்கலாம்” எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் கடந்த மட்டக்களப்பு விஜயத்தில் செங்கலடி மத்தியக்கல்லூரியில் உரையாற்றும் போது இந்தியாவிலிருந்து எதிர்காலத்தில் அமுல் ஐஸ் கிறீம்,அமுல் பால் கம்பெனிகளுக்கு பயன்படும் அதிகம் பால் சுரக்கக்கூடிய மாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவந்து எமது மேய்ச்சற்தரை இல்லாமல் பாரிய அளவு பால் உற்பத்தியில் ஈடுபடப்போகிறோம் என்கிறார். இங்கு இருக்கும் 600000 கால்நடைகளுக்கே மேய்வதற்கு மேய்ச்சல் தரை இல்லாமல் பண்ணையாளர்கள் அவதியுறும் வேளையில் இங்கு அமுலை கொண்டு அமுல்படுத்தப்பர்ப்பார்ப்பது வேடிக்கையான விடயம். இந்திய முதலீடுகள் இங்கு வந்தால் பரம்பரை பரம்பரையாக கால்நடையை சீவனோபாயமாக கொண்டவர்களின் கதி என்ன? கிழக்கு மாகாணத்திலே கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராட்டங்களை செய்து வரும் நிலையில், அதனுடன் தொடர்புபட்ட உற்பத்தி நடவடிக்கைக்காக இந்தியாவின் முதலீட்டிற்கு இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பத்தினை வழங்குமாக இருந்தால் இந்தியா இலாபமீட்ட முடியாத நிலையே ஏற்படும். காரணம் இங்குள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதார நிலை பாதிப்பு, தொழில் சந்தர்ப்பம் இழப்பு இது போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்புவார்கள். காலப்போக்கில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களும் இந்தியாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நிலைமை கூட ஏற்படும் என்றார்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடக அமையத்தில் இடப்பெற்ற ஊடக சந்திப்பின் முழு காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.