இம்மாதம் இரண்டு கிரணங்கள் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதில் சூரிய கிரகணம் இலங்கைக்கு தென்படாது எனவும், சந்திர கிரகணம் மட்டுமே தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அக்டோபர் 14ஆம் திகதி நெருப்பு வளைய சூரிய கிரகணமும், 28ஆம் திகதி இரவில் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளன. இந்த நெருப்பு வளைய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும்.
அத்துடன் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கொலம்பியா மற்றும் பிரேசில் பகுதிகளிலும் தென்படும். சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது. இலங்கை நேரப்படி இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் அக்டோபர் 14ஆம் திகதி இரவு 8.34 மணிக்கு ஆரம்பமாகி பிரேசில் அருகே அக்டோபர் 15ஆம் திகதி அதிகாலை 2.25 மணிக்கு முடிவடைகிறது.
வழக்கமாக, இரண்டு வார இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டு கிரகணங்கள் நிகழும். அதன்படி, 14 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 28ஆம் திகதி இரவு 11.32 மணி முதல் பகுதி சந்திர கிரகணம் நிகழும்.
அக்டோபர் 28ஆம் திகதி மற்றும் அக்டோபர் 29ஆம் திகதி அதிகாலை 3.56 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதி, பசிபிக், அத்திலாந்திக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அந்தாட்டிக்கா ஆகிய நாடுகளில் தென்படும்.
இந்த கிரகணத்தின் பகுதி நிலை இலங்கைக்கு அக்டோபர் 29ஆம் திகதி அதிகாலை 1.05 மணி முதல் 2.23 மணி வரை தென்படும். முழு கிரகணம் அதிகாலை 1.44 மணிக்கு இருக்கும் என தெரிவித்துள்ளார்.